UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 09:34 AM
மைசூரு:
மைசூரில் இன்று முதல் ஆக., 2ம் தேதி வரை, ஜி - 20 கூட்டம் நடப்பதால், நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வரும் செப்டம்பரில் புதுடில்லியில் ஜி - 20 உச்சி மாநாடு நடக்கிறது.இதற்கான பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இதுவரை கர்நாடகாவின் பெங்களூரு, ஹம்பி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் ஆக., 2ம் தேதி வரை மூன்று நாட்கள் மைசூரு நகரில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்கு திங்க் 20 என பெயரிடப்பட்டு உள்ளது. இக்கூட்டம் மைசூரின் எம்.ஜி., சாலையில் உள்ள ராடிசன் புளு பிளாசா ஹோட்டல், லலித மஹால் அரண்மனையில் நடக்கிறது. இதில் பங்கேற்க 43 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், நேற்று நகருக்கு வந்தனர். இவர்கள் அனைவருக்கும், ஹைவே சதுக்கம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இன்று காலை மைசூரு அரண்மனைக்கும், நாளை ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணைக்கும், ஆக., 2ம் தேதி சோம்நாத்பூர் ஆகிய சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்வையிடுகின்றனர். இதனால் நகரின் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.
