இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்றில் 20,132 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை!
இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்றில் 20,132 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை!
UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 07:41 PM

சென்னை:
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 20,132 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 433 பொறியியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, 1.79 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, இணைய வழியில் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு கலந்தாய்வுக்கு, 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூலை 10ல் வெளியானது. மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ல் துவங்கியது.
முதற்கட்டமாக, முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, ஜூலை 22 முதல் 27 வரை நடந்தது.
சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், 836 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில், 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின. பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 29ம் தேதி முதல் ஆக., 10 வரை நடைபெற்றது.
அதில், 26,678 மாணவர்கள் பங்கேற்றதில், 7,385 பேர் தற்காலிக ஆணை, 12,747 பேர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை என மொத்தம் 20,132 பேர் முதல் சுற்றில் ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர்.
இவற்றில், பொதுப்பிரிவில் 17,760 பேரும், 7.5 அரசு ஒதுக்கீட்டில் 1,158 பேரும் அடங்குவர். அதேபோல், தொழில்பிரிவில் 1,054 பேரும், 7.5 அரசு ஒதுக்கீட்டில் 160 பேரும் அடங்குவர்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.