பயன்பாடற்ற பள்ளி குடிநீர் தொட்டிகளை 28க்குள் இடிக்க கலெக்டர் உத்தரவு
பயன்பாடற்ற பள்ளி குடிநீர் தொட்டிகளை 28க்குள் இடிக்க கலெக்டர் உத்தரவு
UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 09:37 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் வட்டாரத்துக்குட்பட்ட, திருவந்தார்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்ததாக, செவ்வாய்க்கிழமையன்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மற்றும் பிற துறை அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, அழுகிய முட்டையை காக்கா கொண்டு வந்து போட்டிருக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்திருந்தார்.மேலும், அப்பள்ளி குடிநீர் தொட்டி நேற்று முன்தினம் இடித்து அகற்றப்பட்டது. குடிநீர் தொட்டியில் இருந்து, தண்ணீர் மாதிரியை பரிசோதனைக்காக குடிநீர் வாரிய அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த விவகாரம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகளை சுத்தம் செய்து, சுகாதாரமாக வைக்க, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருக்கு, கலெக்டர் கலைச்செல்வி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில், பயன்பாடற்ற நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டி, கழிப்பறை கட்டடங்களை இடித்து, வரும் 28க்குள் புகைப்படத்துடன் அறிக்கையாக அளிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், ஆய்வின்போது பயன்பாடற்ற குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் கண்டறியப்பட்டால், ஊராட்சி செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றறிக்கையில் கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
