சென்னை பல்கலையில் ஆராய்ச்சி அதிகம் 3 ஆண்டுகளில் ரூ.150 கோடி கிடைக்கும்!
சென்னை பல்கலையில் ஆராய்ச்சி அதிகம் 3 ஆண்டுகளில் ரூ.150 கோடி கிடைக்கும்!
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதன்மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 150 கோடி ரூபாய் நிதி கிடைக்கும், என பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 1996ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிகளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நாடு முழுவதும் 35 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தை பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், இரண்டாம் இடத்தை டில்லி பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த ஆராய்ச்சிகளில் 47 சதவீதம் இந்த 35 கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 35 கல்வி நிறுவனங்களில் 14 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகமும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த 35 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, ‘ஆராய்ச்சிக்கான ஊக்க நிதி’ வழங்கவுள்ளது. இதன்மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 100 - 150 கோடி ரூபாய் கிடைக்கும். டில்லியில் வரும் 24ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், 35 கல்வி நிறுவனங்களுக்கும் எந்தெந்த ஆராய்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது முடிவு செய்யப்படும்.
சென்னை பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் நான்காவது உயிரி அறிவியல் கருத்தரங்கம் 18, 19ம் தேதிகளில் சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடக்கிறது. இதில், புரதப் பொருட்களின் முப்பரிமாண வடிவமைப்பை உருவாக்குவது, தீய புரதங்களின் செயல்பாட்டைத் தடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
கடல் பாம்பு விஷத்திலிருந்து மருந்து தயாரித்தல், வியர்வையில் உள்ள புரதங்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட 18 ஆய்வுக் கட்டுரைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.
