மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 32 பேர் குரூப் 1, 1ஏ தேர்வுகளில் வெற்றி
மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 32 பேர் குரூப் 1, 1ஏ தேர்வுகளில் வெற்றி
UPDATED : ஏப் 18, 2026 10:19 AM
ADDED : ஏப் 18, 2026 10:20 AM
சென்னை:
'குரூப் 1, 1ஏ' பதவிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகிய நிலையில், சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்தில் படித்த 32 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி., ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர்கள், தொழிலாளர் உதவி கமிஷனர்கள், வனத்துறை உதவி பாதுகாவலர் என, குரூப் 1 மற்றும் 1 ஏ பணியிடங்களை அரசு நிரப்ப நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இப்பதவிகளில் காலியாக இருந்த, 80 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிப்பட்டு, முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு ஜூனில் நடந்தது.
இந்த தேர்வை, 1.81 லட்சம் பேர் எழுதினர். தகுதி பெற்ற 1,801 பேரில், 1,568 பேர் முதன்மை தேர்வை எழுதினர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 160 பேர் நேர்முக தேர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றனர்.
நேர்முக தேர்வு, 15, 16ம் தேதிகளில் நடந்து, முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், எம்.சுப்பிரமணியன் முதல் இடத்தை பிடித்தார். எஸ்.திவ்யலட்சுமி, வி.பிரதீப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
இதில், மனித நேயம் பயிற்சி மையத்தில் படித்த, 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, மனிதநேயம் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கை:
குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், தேர்வர்களுக்கு நேரடி முறையில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. நினைவுத்திறன், கையெழுத்து திறனை மேம்படுத்தும் வகையில், வல்லுனர் குழுவினர் பயிற்சி அளித்தனர்.
மேலும், நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்., 5 முதல் 12ம் தேதி வரை மனிதநேயம் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் உயர் பதவியில் இருந்தவர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்பட்டது.
அதன்படி, நேர்முக தேர்வில், 20 ஆண்கள்; 12 பெண்கள் என, 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தரவரிசையில், இந்த மையத்தில் படித்த மதுரை சேர்ந்த சுபத்ரா நான்காம் இடமும், கோவையை சேர்ந்த லார்சன் இஸ்ரேல், ஏழாவது இடமும், விருதுநகரை சேர்ந் சித்தார்த், திருச்சியை சேர்ந்த செர்ஜியா, மதுரையை சேர்ந்த தாட்சாயினி ஆகியோர் முறையே, 10, 11, 12வது இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
