ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை
ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை
UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 12:36 PM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., யில் மூளை ஆராய்ச்சிக்காக, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் பிரேம்வத்சா, 41 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில், 1971ம் ஆண்டு ரசாயன பொறியியல் பாடத்தில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பிரேம்வத்சா. இவருக்கு, 1999ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. இவர், பேர்பேக்ஸ் பைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் என்ற கனடா நாட்டு நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஐ.ஐ.டி.,யில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், 2022 மார்ச் மாதம் துவக்கப்பட்டது. மனித மூளை தரவு, அறிவியல் வெளிப்பாடு, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை வைத்து, மனித மூளையை செல்லுலார் மட்டங்களில் படம் பிடிக்க, ஒரு உலகளாவிய லட்சிய திட்டத்தை, இந்த மையம் செயல்படுத்தி வருகிறது.
இம்மையத்தில் நடந்து வரும் ஆராய்ச்சி பணிகளுக்காக, பிரேம்வத்சா 41 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அவருக்கு ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.