நீட் முறைகேடு மாணவர்களின் சேர்க்கை ரத்து!: 42 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுதவும் தடை
நீட் முறைகேடு மாணவர்களின் சேர்க்கை ரத்து!: 42 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுதவும் தடை
UPDATED : மே 04, 2025 12:00 AM
ADDED : மே 04, 2025 07:52 AM

புதுடில்லி:
நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
சஸ்பெண்ட்
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.அதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 14 மாணவர்களின் மருத்துவ கல்லுாரி சேர்க்கையை ரத்து செய்துள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 42 மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், முறைகேட்டில் தொடர்புடைய மருத்துவ மாணவர்கள் 26 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 215 மாணவர்களிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இன்று, நாடு முழுதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் நிலையில், ஒரு நாள் முன்னதாக இந்த நடவடிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ளது.
கண்காணிப்பு
கல்வித்துறையில் முறைகேடு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்வோம்.
தேர்வுக்கு முன், தேர்வின் போது, தேர்வுக்கு பின் முறைகேட்டில் ஈடுபட்டால், மூன்று ஆண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க நேற்று மாதிரிப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
மொபைல் சிக்னல் ஜாமர், பயோமெட்ரிக் சோதனை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று அடுக்கு கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

