காவலர் பணி எழுத்து தேர்வு: 5 லட்சம் பேர் பங்கேற்பு
காவலர் பணி எழுத்து தேர்வு: 5 லட்சம் பேர் பங்கேற்பு
UPDATED : டிச 14, 2020 12:00 AM
ADDED : டிச 14, 2020 10:31 PM
சென்னை:
தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.இந்தாண்டு காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு, ஆண்கள், 685; பெண்கள் மற்றும் திருநங்கையர், 3,099 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனுமதி
சிறப்பு காவல் படை பிரிவுக்கு, 6,545; சிறைத்துறைக்கு, ஏழு பெண்கள், 112 ஆண்கள் என, 119; தீயணைப்பு துறைக்கு, 458 ஆண்கள் என, மொத்தம், 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், செப்., 17ல் வெளியிட்டது. இப்பணிகளுக்கு, www.tnusrbonline.org என்ற, இணையதளம் வாயிலாக, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.அவர்களில், 5 லட்சத்து, 50 ஆயிரத்து, 314 பேர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இவர்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை உட்பட, 37 மாவட்டங்களில், 499 தேர்வு மையங்களில், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கி, மதியம், 12:20 மணிக்கு முடிந்தது.சென்னையில், பச்சையப்பன் மற்றும் லயோலா கல்லுாரிகள் உட்பட, 35 மையங்களில், 29 ஆயிரத்து, 981 பேர் தேர்வு எழுதினர். தேர்வு கண்காணிப்பு பணிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உத்தரவுஇதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின், மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் சிலர் வந்தனர்.அவர்களுக்கு முக கவசம் வினியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்திற்குள் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஏற்கனவே, தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கையேடுகளாக வழங்கப்பட்டன. அதன்படி, நல்ல முறையில் எழுத்து தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
