UPDATED : மே 20, 2011 12:00 AM
ADDED : மே 20, 2011 10:16 AM
தமிழகத்தில் தொழிற்கல்வி படித்து, பணிக்காக காத்திருப்போர் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
தமிழகத்தில், தொழிற்கல்வி மையங்களில் படித்து, வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகள் காத்திருக்கின்றனர். தொழிற் கல்வி ஆசிரியர்களை பொறுத்தவரை, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் தான் நியமிக்க முடியும். இதனால், பலரும் 50 வயதை எட்டியும் பணி நியமனம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனிடையே, 2011 ஜன., முதல் தமிழகத்தில் நடந்து வந்த தொழிற்கல்வி நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், தையல், ஓவியம், இசைக்கல்வி கற்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், தொழிற்கல்வி பயின்று ஆசிரியர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் நபர்கள் குறித்த பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தையல், இசை, ஓவியம் படித்து வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து பட்டியலும் சேகரிக்கப்படுகிறது.
இப்பட்டியலை உடனடியாக வழங்கும்படி, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
