UPDATED : மே 21, 2011 12:00 AM
ADDED : மே 21, 2011 06:26 PM
பெரும்பாலான மாணவர்கள், கல்லூரிக்கு சென்றவுடன் படிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. கல்லூரிக்கு வந்துவிட்டதால் இனி படிக்க தேவையில்லை என்ற தவறான எண்ணம் சில மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
கவனச்சிதறல்கள் காரணமாகவும் சிலர் படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. துவக்கத்தில் ஆட்டம் போட்டு "அரியர்ஸ்' வைத்துவிட்டு கடைசியாண்டில் அடித்து பிடித்து அனைத்து பேப்பர்களையும் "பாஸ்' செய்து விடலாம் போன்ற குருட்டு நம்பிக்கைகளால் மாணவர்கள் சிலர் படிப்பில் மந்தமாக இருப்பதாக கல்லூரி பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் வழங்கும் ஆலோசனைகள்:
* நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். மற்றவர்களுடன் அளவோடு பழக வேண்டும். சீனியர் மாணவர்களுடன் நல்ல உறவை பேணி அவர்களின் வழிகாட்டுதல்களை பெறலாம்.
* நீங்கள் சேரும் கல்லூரியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம்.
* நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். இது கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* முதலாமாண்டில் இருந்தே ஆர்வத்துடன் படிக்க வேண்டும். கல்லூரியில் உள்ள நூலகங்கள் மற்றும் இணையதள வசதிகளை முழுமையாக பயன்படுத்தி புத்தகத்தை தாண்டிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* வேலைவாய்ப்பை பெற தேவையான அனைத்து தகுதிகளையும் முதலாமாண்டில் இருந்தே வளர்த்து கொள்ள வேண்டும்.
* பொதுவாகவே கல்லூரி பேராசிரியர்கள் நண்பர்களை போன்று பழகுவார்கள். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். தினசரி வகுப்புகளுக்கு தவறாமல் செல்ல வேண்டும்.
* கவனச்சிதறல்களுக்கு ஆட்படாமல் மனஉறுதியுடன் செயல்பட வேண்டும்.
மொத்தத்தில் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளும் வகையில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் செயல்படவேண்டும்.
