தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களே, திட்டமிட வேண்டிய நேரமிது!

மாணவர்களே, திட்டமிட வேண்டிய நேரமிது!

மாணவர்களே, திட்டமிட வேண்டிய நேரமிது!


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 03:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 03:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிலருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாகவோ, சிலருக்கு எதிர்பார்த்ததைவிட குறைவாகவோ வந்திருக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் பலர் முடிவு செய்திருக்கலாம். எது எப்படியோ, மாணவர் பருவத்தின் ஒரு முக்கிய கட்டத்தை கடந்து விட்டோம்.


பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் என்பது பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றவை இல்லையென்றாலும், பலவிதங்களில் இதற்கும் முக்கியத்துவம் உண்டு. உங்கள் வாழ்க்கையை எந்த துறையில் கழிக்கலாம் என்பதற்கான படிப்புகளை தேர்ந்தெடுக்க, பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் அரசு தொழிற்கல்வி நிறுவனங்களில்(பாலிடெக்னிக், ஐ.டி.ஐ) சேர விரும்பினாலும், மேல்நிலைப் படிப்பிற்கான சிறந்த பள்ளியில் சேர விரும்பினாலும் உங்களுக்கு அந்த மதிப்பெண்கள் முக்கியமாக பயன்படும்.


சரி, இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இருக்கும் மதிப்பெண்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்கும் நேரமிது. இன்றைய சமூகத்தில் பெரும்பான்மையான மாணவ-மாணவியர் விரும்புவது 2 படிப்புகள்தான். பொறியியல் மற்றும் மருத்துவம். இந்த இரண்டையும் சொல்லித்தான் நமது சமூகத்தில் பலர் வளர்க்கப்படுகின்றனர். இன்றைய நிலையில் அதிக ஆட்கள் தேவைப்படுகிற துறைகளாக அவை உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை கொண்ட பிரிவை, மேல்நிலைப் படிப்பில் தேர்ந்தெடுக்கவே பலரும் விரும்புகின்றனர்.


அதேசமயம், இந்த பிரிவை பெயர்பெற்ற பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் பலர் விரும்புகின்றனர். ஏனெனில் அந்த பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான பயிற்சிகள் சிறப்பாக இருக்கும் மற்றும் சிறந்த தேர்ச்சி விகிதம் உள்ள பள்ளி என்பது முக்கிய காரணங்கள். எனவே நீங்கள் எந்த பள்ளியில் படித்தாலும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை விரும்பினால், அதுவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பினால் அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.


உதாரணமாக ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க விரும்பினால், அதற்குரிய நுழைவுத்தேர்வுகளுக்கு இப்போதே முழுமூச்சாக படிக்கத் தொடங்க வேண்டும். பாடங்களிலும் சம கவனம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலை, கோவை பி.எஸ்.ஜி., சி.ஐ.டி, மதுரை தியாகராஜா போன்ற கல்லூரிகளில் பொறியியல் படிக்க அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும்.


சென்னையிலுள்ள ஸ்டான்லி, சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் கோவை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமெனில் மிக அதிக மதிப்பெண்கள் வேண்டும். எனவே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஆயத்தங்களை இப்போதே தொடங்க வேண்டிய நேரமிது. ஏனெனில், மேல்நிலை படிப்புகளுக்கு பிறகுதான் நீங்கள் சொந்த காலில் நிற்கக்கூடிய வாழ்க்கை தொடங்குகிறது.


மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளை விரும்பாதவர்கள், சட்டம், ஆசிரியர் தொழில், வணிகத்துறை, கணக்கியல் துறை மற்றும் இதர தொழில் துறைகளை விரும்புகிறார்கள். இதற்கேற்ப சில பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். இங்கே நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகள்தான் உயர்ந்தவை. எனவே அந்த துறைகளுக்கு செல்லக்கூடிய பிரிவுகளை தேர்ந்தெடுப்பதுதான் பெருமை என்று தயவுசெய்து எந்த மாணவரும் நினைக்க கூடாது. இதுபோன்ற ஒரு எண்ணமானது நமது சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு மாயை. சமூகத்தில் இருக்கக்கூடிய மற்றும் ஒழிக்கப்பட வேண்டிய தீமைகளில் அதுவும் ஒன்று.


எந்த துறையில் உங்களுக்கு சாதிக்க விருப்பமோ அல்லது முடியுமோ அல்லது எந்த துறையின்மேல் சிறுவயதிலிருந்தே உங்களுக்கு ஆர்வமோ, அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுங்கள். அதுவே புத்திசாலித்தனம். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், வரலாறு, கணக்கியல், பொருளாதாரம், வணிக கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற பாடங்கள்தான் பொதுவாக பலராலும் அறியப்பட்ட மேல்நிலைப் பிரிவு பாடங்கள். ஆனால் பலரும் அவ்வளவாக அறியாத பல வித்தியாசமான பாடங்கள் மேல்நிலைப் படிப்பில் உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்துகொண்டால், உங்களுக்கு அவை பிடித்திருந்தால், அந்த பிரிவை எடுத்து மகிழ்ச்சியாக படிக்கலாம். இதன்மூலம் அதிக மதிப்பெண்ணும் எடுக்கலாம், விரும்பிய துறைகளுக்கும் எளிதாக செல்லலாம். சிறந்த ஆராய்ச்சியாளராகவும் ஆகலாம்.


ஆந்த்ரோபாலஜி (மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றிய படிப்பு), கம்யூனிகேடிவ் ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், அறநெறி மற்றும் இந்திய கலாச்சாரம், காந்திய சிந்தனைகள், புவியியல், மண்ணியல், இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரம், மனையியல்(ஹோம் சயின்ஸ்), இதழியல்(ஜர்னலிசம்) தர்க்கவியல்(லாஜிக்), இசை, தத்துவம், அரசியல் அறிவியல், உளவியல், சம்ஸ்கிருத சாஸ்திரம், சமூகப் பணி, சமூகவியல், புள்ளியியல், ஆயுர்வேதம், ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல், அடிப்படை அறிவியல், சித்தா, இந்திய இசை, மேற்கத்திய இசை, மேம்பட்ட ஆங்கிலம், அலுவலக மேலாண்மை, பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, உணவு கட்டுப்பாடு மற்றும் சத்துணவு.


போன்ற ஏராளமான மாறுபட்ட படிப்புகள் மேல்நிலை பிரிவுகளில் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துப் படித்து சாதிக்கலாம். உலகம் நமக்கு முன்பு பெரிதாக இருக்கிறது. நாம்தான் கண்களை திறந்து பார்க்க வேண்டும். வேலை வாய்ப்பையே முக்கியமாக நினைப்பவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள், தனிப்பட்ட முறையில் சாதிக்க நினைப்பவர்கள், சிறந்த மேதையாக உருவாக விரும்புபவர்கள், மனிதர்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் ஆகிய அனைவருக்குமான படிப்புகள் மேல்நிலை படிப்பில் உள்ளன. முடிவு மாணவர்கள் கையில்தான் உள்ளது. போனது போகட்டும். இது சரியாக திட்டமிடவேண்டிய நேரம்!


 


 


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us