UPDATED : செப் 16, 2011 12:00 AM
ADDED : செப் 16, 2011 10:42 AM
சுருக்கமாகச் சொல்வதானால், எழுதும் பென்சிலில் இருந்து, உடுத்தும் ஆடை வரை; திருமணமாகி குழந்தைகள் இருப்பின் அவர்களின் செலவினத்தையும் உள்ளடக்கிய உதவித்தொகை காமன்வெல்த் உதவித்தொகையாக மட்டுமே இருக்கும். பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் உட்பட 54 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், கார்டிஃப், இம்பீரியல் கல்லூரி - லண்டன், பல்கலைக்கழக கல்லூரி- லண்டன், பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகம், பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் பயில காமன்வெல்த் கல்வி உதவித்தொகை மற்றும் ஆய்வு நிதி வழங்கப்படுகிறது.
துறைகள்
கேன்சர் தொடர்பான மருத்துவப்பயிற்சி மற்றும் ஆறுமாத ஆய்வு, இதயம், மகப்பேறு, மருந்தியல், பல்மருத்துவம், எலும்புமூட்டு, நரம்பியல், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்; பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல், அறிவியல், வேளாண்மை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மற்றும் உயர்கல்வி மேற்கொள்ளலாம்.
கல்வித்தகுதி
முதுநிலை படிப்பில் சேர இளநிலைப்பட்டம் நிறைவு செய்திருக்க வேண்டும். மானுடவியலில் குறைந்தது முதல் வகுப்பிலும்; மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பத்தில் 65 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
பிஎச்.டி.,க்கு முதுநிலை வகுப்பில் மேற்கூறிய அளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மருந்தியல் மற்றும் பல் மருத்துவப் பயிற்சிக்கு டாக்டராகவோ, பல் மருத்துவராகவே அக்., 2002ல் இருந்து செப்., 30 2007ம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2002க்கு முன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை சலுகையில் சிறிது வேறுபாடு உண்டு. அதுகுறித்த விவரங்களை http://bit.ly/cscuk-apply என்ற இணைய முகவரியில் பெறலாம்.
உதவித்தொகையின் விவரம்
கல்வி மற்றும் தேர்வுக்கட்டணமாக மாதம் இந்திய மதிப்பில் தோராயமாக 81 ஆயிரம் ரூபாய்; லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன்முறை வருகை, ஆய்வுக்கட்டுரை, உடைகள், பயணப்படி உள்ளிட்டவற்றுக்காக 65 ஆயிரம் ரூபாய்; திருமணமானவராக இருப்பின் மாதம் 16,000 ஆயிரம் ரூபாய்; 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பின் முதல் குழந்தைக்கு 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளுக்கு 8,000 ரூபாய் என உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு
வரும் அக்., 12ம் தேதி அன்று 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
ஆங்கில மொழித்தகுதி
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைப் பொருத்து ஆங்கில மொழித்திறன் குறித்த தகுதி மாறுபடுகிறது. பெரும்பாலும், GRE, GMAT மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. IELTS மதிப்பெண்ணாக இருப்பின் வரும் அக்டோபரில் இருந்து வரும் 2012 மார்ச்., 6ம் தேதிக்குள் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆங்கில மொழித்தகுதி குறித்து தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை சரிபார்த்துக் கொள்வது நலம்.
விண்ணப்பிக்கும் முறை
www. education.nic.in என்ற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதிச் சான்றிதழ், ஆய்வறிக்கைகள், பணி முன்அனுபவம், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். உயர்கல்வித்துறை அமைச்சகம் 60 விண்ணப்பங்களை பரிந்துரைக்கும், இதில் 25 பிஎச்.டி., தொடர்பானதாக இருக்கும்.
வரும் அக்., 7ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிநாள். சில விதிவிலக்குகளால், அக்., 12ம் தேதி வரை அனுப்பலாம். நவ., 15ம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை பற்றி எவ்வித தகவலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை எனில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள்.
கூடுதல் விவரங்கள், பயிலும் கல்விநிறுவனங்களின் முழுப்பட்டியல் போன்றவற்றுக்கு http://cscuk.dfid.gov.uk/apply/uk-universities என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
