UPDATED : செப் 19, 2011 12:00 AM
ADDED : செப் 19, 2011 12:45 PM
பெரம்பலூர்: "மாணவ, மாணவிகள் படிப்பது ஒன்றையே தங்களின் கடமையாக நினைத்து செயல்படவேண்டும்" என்று பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது பேசினார்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நேற்று நடந்தது.
விழாவில், கலெக்டர் தரேஷ் அஹமது 557 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைக்கான பத்திரங்களை வழங்கி பேசியதாவது: மாணவ, மாணவிகள் கல்வி கற்க அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு பொருளாதார மற்றும் சமூக காரணங்களால், ஒருசில இடங்களில் மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை இடையிலேயே நிறுத்துகின்ற நிலை உள்ளது.
இந்நிலையை போக்க எஸ்.எஸ்.எல்.சி.,வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படித்து முடிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு அரசின சார்பாக வழங்கப்படும் ஊக்க தொகையானது தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகள் +2 முடித்தவுடன் அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் 219 மாணவ, மாணவிகளுக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய்க்கான பத்திரமும், ப்ளஸ் 1 படிக்கும் 187 மாணவ, மாணவிகளுக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பத்திரமும், ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா 2,000 வீதம் 3 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான பத்திரங்களும் என மொத்தம் 557 மாணவ, மாணவிகளுக்கு 9 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்கான ஊக்கத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. தற்போது கிராமப்புற மாணவ, மாணவிகளும் ப்ளஸ் 2 மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு, மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்விகளை படிக்கும் வசதி உள்ளது. மாணவ, மாணவிகள் படிப்பதை மட்டுமே தங்களின் ஒரே கடமை மற்றும் நோக்கமாக கொண்டு, படித்து பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
