UPDATED : அக் 16, 2011 12:00 AM
ADDED : அக் 16, 2011 12:24 PM
மதுரை: "தற்கொலைகள் நடக்க காரணம்" குறித்து மனநல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ வேண்டிய வயதில், இதுபோன்ற செயல்பாடுகள், சமூக பாதிப்பை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.
இதுகுறித்து மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மனநல நிபுணர் கார்த்திகேயன் தெரிவித்து இருப்பதாவது: மனநலனை பாதுகாக்காததே இச்சம்பவங்களுக்கு காரணம். மருத்துவ முன்னேற்றத்தால் மனநல குறைபாடுகள் பல திருத்தப்படுகின்றன. தற்கொலை என்பது ஒரு மனிதனின் பிரச்னை அல்ல. அது சமுதாய பிரச்னை. பொருளாதார சூழ்நிலை, அன்றாட வாழ்வில் ஏற்படும் செலவினங்களை சமாளிக்க முடியாமை இதற்கு காரணமாக அமைகின்றன. கட்டுப்பாடுடன் வாழக் கற்றுக் கொண்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மனஅழுத்தம் ஏற்படும்போது, ஆன்மிக சிந்தனை, முன்னோர், அறிஞர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிக்கலாம்.
குடும்பநல ஆலோசகர் சித்ரா கூறியதாவது: இன்றைய நிலையில் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பெற்றோர் சிரமம் குறித்து, குழந்தைகள் சிந்திப்பதில்லை. சிறுவர்கள், பெரியவராகி பணிக்கு செல்லும்போது, மாறுபட்ட சூழலில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அச்சூழலை ஏற்கும் மனநிலை இல்லாதபோது, ஏமாற்றம் அடைகின்றனர். அதன்பின்பே மனஅழுத்த நிலைக்கு ஆளாகின்றனர்.
தற்கொலை செய்பவர்கள் உடனடியாக செய்வதில்லை. அதற்கான அறிகுறியை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர். இதை முதலிலேயே கண்டறிந்து சரிசெய்தால், பின்பு தற்கொலை எண்ணமே எழுவதில்லை. அனைவருக்கும் சகிப்புதன்மை, பொறுமை அவசியம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
