UPDATED : நவ 11, 2011 12:00 AM
ADDED : நவ 11, 2011 01:13 PM
ஊட்டி : ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
மாவட்ட கல்வித்துறை சார்பில் ஊட்டி பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் துவக்கி வைத்தார்.
141 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைக்க ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகையில் மாணவர்கள் தங்களின் படைப்புக்கு தேவையான பொருட்களை வாங்கி படைப்புகளை உருவாக்கியிருந்தனர்.
பள்ளி மாணவர்களின் படைப்புகள் அவர்களின் கற்பனை மற்றும் அறிவியல் திறனுக்கு தீனியாக அமைந்திருந்தன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்பது இந்த கண்காட்சியில் நிரூபிக்கப்பட்டது.
தும்மனட்டி பள்ளி மாணவர்கள் அணு மின் நிலையத்தின் மாதிரியை உருவாக்கி, அணுமின் சக்தியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினர். மேலும் தங்களது படைப்பு குறித்து பிற பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், மாணவர்களின் இந்த படைப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மாவட்ட கல்வி அலுவலர் ரங்கநாதன், குன்னூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ, துணை ஆய்வாளர் துரை ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
