UPDATED : நவ 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இப்பிரச்னையை சமாளிக்க பைலட்டுகளின் ஓய்வு பெறும் வயதை 5 ஆண்டுகள் உயர்த்தியும் எதிர்பார்த்த பலன் இல்லை. இந்நிலையில், எதிர்காலத்தில் தேவைப்படும் பைலட்டுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய பைலட்டுகளை உருவாக்காவிட்டால் வெளிநாட்டினர் மட்டுமே இத்துறையில் கோலோச்சும் நிலைமை ஏற்படும்.
உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது விமான பைலட்டுகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விமானங்களை இயக்க போதுமான பைலட்டுகள் இல்லாத காரணத்தினால் பைலட்டுகளின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடரும் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து கூடுதல் சம்பளம் கொடுத்து பைலட்டுகளை வாடகைக்கு எடுக்க வேண்டி உள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து, சிவில் விமான போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் பயணிகள் போக்குவரத்தில் ஆர்வத்துடன் இறங்கியுள்ளன. போட்டி காரணமாக கட்டணங்கள் குறைக்கப்பட்டன.
பயணிகள் விமானங்களை இயக்க பைலட்டுகளுக்கு வலை விரிக்கப்பட்டதால், வர்த்தக விமானங்களை இயக்கும் லைசென்ஸ் பெற்ற புதிய விமானிகளுக்கு கிராக்கி அதிகரித்தது. சமீப காலமாக சிவில் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட மந்தம் காரணமாக சூழ்நிலை மாறியது. பயிற்சி அளிக்கப்பட்ட பைலட்டுகள் ஓரம் கட்டப்பட்டனர். பயிற்சி பைலட்டுகளின் நிலை தாழ்ந்தது. மற்ற துறைகளில் பணி செய்தால் பைலட்டுகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், பெரும்பாலான பைலட்டுகளும் மற்ற துறை பணிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனாலும் பைலட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறையை சமாளிக்க பைலட்டுகளின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய விமானங்களில் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற நிலையில் அதிக எண்ணிக்கையில் பைலட்டுகள் தேவைப்படுவார்கள்.
இந்த தேவையை சமாளிக்கும் வகையில் புதிய பைலட்டுக்களை உருவாக்க வேண்டியது கட்டாயம். அரசும், தனியார் நிறுவனங்களும் இதற்கு முழுவீச்சில் இறங்க வேண்டும்.
கேப்டன் சத்தீஷ் சர்மாவை தலைவராக கொண்ட பர்மா மற்றும் இந்திய ஏரோ கிளப் கடந்த 1927ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி சிவில் விமானத்துறையால் துவக்கப்பட்டது. பிளையிங் கிளப், கிளைடிங் கிளப், ஏரோ ஸ்போட்ஸ் ஆர்கனைசேஷன் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய ஏரோ கிளப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பவர்ட் பிளையிங், கிளைடர் பிளையிங், ஸ்கை டைவிங், ஹேங் டைவிங், பலுவனிங், மைக்ரோ லைட் பிளையிங், பாராசைலிங், ஏரோ மாடலிங், பைலட் பயிற்சி உள்ளிட்ட பல ஏரோ பயிற்சிகள் இந்த கிளப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
டில்லி பிளையிங் கிளப்பில் 12 விமானங்களும், பரோடாவில் உள்ள குஜராத் பிளையிங் கிளப்பில் 9, சென்னை, மெட்ராஸ் பிளையிங் கிளப்பில் 7, மும்பை, பாம்பே பிளையிங் கிளப்பில் 8 விமானங்களும் உள்ளன. இவை தவிர பாட்டியாலா, ஐதராபாத், போபால், லூதியானா, பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், நாக்பூர், கோவை, புவனேஸ்வர், கோல்கட்டா உள்ளிட்ட இடங்களில், விமான பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் பிளையிங் கிளப்புக்கள் இயங்கி வருகின்றன.
