‘மாணவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது பேனா‘
‘மாணவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது பேனா‘
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “மாணவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது, அவர்களின் கையிலிருக்கும் பேனா,” என மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.
கோவையில் நடந்த, ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், தன்னம்பிக்கை பேச்சாளர் மரபின்மைந்தன் முத்தையா பேசியதாவது:
பொதுத்தேர்வில் வெற்றி பெற பெற்றோர், ஆசிரியர் சொல்வதை மாணவ, மாணவியர் கேட்க வேண்டும். கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் கூறும் போது ‘ஆறு மாதமாக ‘டிவி’ பார்ப்பதை நிறுத்திவிட்டோம்’ என்றனர். பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், ‘டிவி’ பார்ப்பதை தவிர்ப்பது அதிக மதிப்பெண் பெற வழி வகுக்கும்.
மாணவர்கள் தேர்வில் எழுதும் பேனாதான் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது. எந்தப் பாடம் அதிகமாக வராது என நினைக்கிறீர்களோ, அந்தப் பாடத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
ஆசிரியர்கள் மழை மேகம் போன்றவர்கள்; அவர்கள் பொதுவாக எல்லோருக்கும் பொழிவார்கள். ஆனால், அதைப் பெற்றுக் கொண்டு எப்படி மாறுகிறோம் என்பது மாணவர்களின் கையில் தான் இருக்கிறது. ஆசிரியர்கள் பொழியும் கல்வி என்ற மழை, சிப்பி போல் இருக்கும் மாணவரிடம் இருந்தால் அது முத்தாக விளையும். முத்து சிப்பி போல, சிறந்த நிலையில் இருந்தால் தான், மாணவர்கள் சாதனை செய்ய முடியும். இவ்வாறு மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.
