UPDATED : செப் 04, 2013 12:00 AM
ADDED : செப் 04, 2013 09:56 AM
இங்கே, வெளிநாட்டுக் கல்வி தொடர்பான சில சந்தேகங்களுக்கு பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கல்வி தொடர்பான ஆலோசகர்களை அணுகுவது ஒருவருக்கு பயனுள்ளதாக அமையுமா?
ஒரு நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர், நமக்கான பரந்த வாய்ப்புகளை காட்டுபவராக இருப்பார். மருத்துவம், பொறியியல் மற்றும் மீடியா ஆகிய துறைகளுக்கு மத்தியில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மக்கள் அறிய வேண்டும். உதாரணமாக, மருத்துவப் படிப்பிற்கு மாற்றாக, மாலிக்யூலர் பயாலஜி, பயோடெக்னாலஜி அல்லது பயோமெடிக்கல் சயின்ஸ் ஆகிய படிப்புகளை மேற்கொள்ளலாம்.
வெளிநாட்டு படிப்பிற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா?
பிரிட்டனைப் பொறுத்தவரை, மாணவர்கள், தாங்கள் விரும்பும் பல துறைகளுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கிறார்கள். அங்குள்ள பல்கலைகள், பலவிதமான படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிப்பதில்லை. தங்களின் விண்ணப்ப படிவங்களில், அதிகபட்சம் 3 பல்கலைகள் வரை, தங்களின் விருப்ப தேர்வாக குறிப்பிடலாம்.
அதேசமயம், பிரிட்டனின் சில பல்கலைகள் மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பல பல்கலைகள், ஒவ்வொரு படிப்பிற்கும் தனியான விண்ணப்ப கட்டணத்தை வசூலிப்பதோடு, நீண்ட ஆவணப் பட்டியலையும் கோருகின்றன. எனவே, இந்த தனிக் கட்டணங்களை செலுத்த தயாராக இருப்பவர்கள், எத்தனை விண்ணப்பங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இதே நிலைதான்.
ஒரு கன்சல்டன்ட் அல்லது ஏஜென்ட், வெளிநாட்டுக் கல்வியைப் பற்றி எனக்கு சரியாகத்தான் அறிவுரை கூறுகிறார் என்று எவ்வாறு கண்டறிவது?
நீங்கள் நாடவிருக்கும் கன்சல்டன்ட் பற்றி, அவரிடம் ஏற்கனவே ஆலோசனைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கவும். அதேசமயம், ஒரு வெளிநாட்டு கல்வி ஆலோசகரை நாடும் முன்னதாக, தாங்கள் படிக்கவிருக்கும் படிப்பு, விரும்பும் பல்கலை மற்றும் நாட்டைப் பற்றி முடிந்தளவு ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தேவையான விபரங்களைப் பெற்ற பிறகு, அடுத்த கட்டமாக ஆலோசகரை நாடலாம்.
ஆலோசகர் தரும் விபரங்கள் சரியா என்பதை ஆன்லைனில் நன்றாக சரிபார்க்க வேண்டும். பொதுவாக, ஆலோசகர்கள் யாரும் நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று ஆலோசனை தரமாட்டார்கள் மற்றும் தரவும் கூடாது. மாறாக, உங்களின் விருப்பம் தொடர்பான தகவல்கள் மற்றும் அதற்கேற்ற ஆலோசனைகளை மட்டுமே அவர்கள் வழங்குவார்கள்.
இன்னொன்றையும் மாணவர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பல ஆலோசகர்கள், ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள். எனவே, தாங்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்துவிட அவர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு அட்மிஷனுக்கும், அவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்.
எனவே, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் வலைதளம் சென்று, சம்பந்தப்பட்ட ஆலோசகர் நம்பகமானவரா என்பதை சரிபார்க்கவும். மேலும், நீங்கள் படிக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலையில் ஏற்கனவே படித்த மற்றும் தற்போது படிக்கும் மாணவர்களிடம் பேசி, விஷயங்களை அறிந்துகொள்வது மிக மிக பயனுள்ள ஒரு வழி.
ஒரு தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலையில் எனக்கான இடத்தைப் பெறுவதை எவ்வாறு உறுதி செய்வது?
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள், பொதுவாக, மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகள், கல்வி சாராத செயல்பாடுகள்(extra curricular activities) மற்றும் நோக்க அறிக்கை(SOP) ஆகிய அம்சங்களை மொத்தமாக ஒப்பிட்டு பார்த்தே முடிவெடுக்கின்றன.
இவைதவிர, பகுதிநேர அல்லது முழுநேர பணி அனுபவம், அதிக டெஸ்ட் மதிப்பெண்கள், வலுவான அகடமிக் அல்லது புரபொஷனல் பரிந்துரைகள் ஆகியவை, ஒருவருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அதேசமயம், வெளிநாட்டு கல்விக்கான செயல்பாட்டை, ஒருவர், குறைந்தபட்சம் 12 முதல் 15 மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்தால்தான், விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.
கீழ்கண்ட அம்சங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். அவை,
* நல்ல அகடமிக் செயல்பாடு
* இன்டர்ன்ஷிப் அல்லது குறுகியகால புராஜெக்ட் ஆகியவற்றில் பணி அனுபவம்
* ஆக்டிவாக இருத்தல் மற்றும் திறன்சார் நடவடிக்கைகளில் ஈடுபடல்(extra curricular activities) மற்றும் வாய்ப்பு கிடைக்கையில் சிலவகை நிறுவனங்களில் Volunteer -ஆக பணிபுரிதல்.
* உங்கள் விண்ணப்பத்தை மெருகேற்றுதல்.
உங்களின் முந்தைய அகடமிக் சாதனைகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட டெஸ்ட் மதிப்பெண்கள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள். மேலும், உங்களின் டெஸ்ட் மதிப்பெண்களை அதிகப்படுத்த, மீண்டும் மீண்டும் டெஸ்ட் எழுதவும். நன்கு யோசித்து, நல்ல உயர்தரமான கட்டுரையை எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், இதன்மூலம்தான் உங்களை கல்வி நிறுவன தேர்வு கமிட்டியினர் நன்றாக அறிந்துகொள்ள முயல்வர்.
