UPDATED : பிப் 12, 2015 12:00 AM
ADDED : பிப் 12, 2015 12:05 PM
பெங்களூரு: ”வரும், 16ம் தேதியிலிருந்து, 18ம் தேதி வரை, பெங்களூரு எலஹங்கா ராணுவ விமான தளத்தில், ’ஏரோ இந்தியா - 2015’ விமான கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்,” என, ’ஏரோ’ இயக்குனர், தமிழ்மணி தெரிவித்தார்.
8 நாடுகள்:
பெங்களூருவில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், ’ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி, இம்முறையும் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏரோ இந்தியா - 2015 கண்காட்சியை முன்னிட்டு, 16ம் தேதியிலிருந்து, 18ம் தேதி வரை, பெங்களூரு நிமான்ஸ் ஹாலில் சர்வதேச கருத்தரங்கு நடக்கவுள்ளது.
இதில், வெளிநாட்டு பிரதிநிதிகள், பொருளாதார வல்லுனர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். எட்டு நாடுகளின் விமான கம்பெனிகளுக்கும் கலந்து கொள்கின்றன. ’ஏரோ ஸ்பேஸ் - 2020’ என்ற தலைப்பில் கீழ், இந்த கருத்தரங்கு நடக்கவுள்ளது. மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சித்தேஸ்வர் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 75க்கும் அதிகமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது.
’மேக் இன் இந்தியா’:
இதேவேளையில், கண்காட்சியும் நடக்கவுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின், 440 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த முறை, ’ஏரோ இந்தியா’, பிரதமரின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரும். இலகு விமானம், பாம்பர்கள், ரேடார்கள் உள்ளிட்டவைகளின் கண்காட்சியும் நடக்கவுள்ளது.
பூமி மீது நின்று கொண்டே, பறப்பதை போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும், ’சிமுலேஷன்’ திட்டம், இம்முறை சிறப்புடையதாக இருக்கும். இதை கண்டுகளிக்க, சிறப்பு பாஸ்கள் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில், யுத்த விமான தொழில்நுட்பம், ஆளில்லாத விமானம், சென்சார் தொழில்நுட்பம், கண்காணிப்பு வசதி கொண்ட தொழில்நுட்பம் உட்பட பாதுகாப்பு துறைக்கு தொடர்புடைய தகவல்களும் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
