UPDATED : டிச 18, 2015 12:00 AM
ADDED : டிச 18, 2015 11:02 AM
கோவை
: தமிழக
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி
தேர்வு நிபந்தனைகளுடன் பணியில் உள்ள, பட்டதாரி
ஆசிரியர்களின் வளரூதியம், ஊக்க ஊதியம் திடீரென
நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி
உரிமைச்சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு
டெட் நடத்த வேண்டியது
அவசியம். தமிழகத்தில், இத்தேர்வு, இரண்டரை ஆண்டாக நடக்கவில்லை. இந்நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில்,
டெட் நிபந்தனைகளுடன்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, கடந்த அக்டோபர் முதல் வழங்க வேண்டிய
வளரூதியம், ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிலருக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட வளரூதியம், ஊக்க ஊதியத்தை, கட்டாயத்தின் பேரில், தலைமையாசிரியர்கள் திரும்பப்பெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. தென்னக கல்வி குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், நான்கு ஆண்டாக ஊக்க ஊதியம், வளரூதியம் இல்லாமல் பணியில் உள்ளேன். தேர்வில் தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்தில், அரசு முறையாக தேர்வு நடத்தாததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரு சிலருக்கு வழங்கிய பணப்பலன்களையும், திரும்பப் பெறுவது, டெட் நிபந்தனையின் கீழ், பணியாற்றுபவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. டெட் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிடவேண்டும், என்றார்.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், டெட் தேர்வு நிபந்தனையுடன் பணிபுரிபவர்களின் பணப்பலன் வழங்குவதில் சில குழப்பங்கள் உள்ளன. தேர்வு அறிவிப்பு குறித்து நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணப்பலன் எதுவாயினும், தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், மொத்தமாக வழங்கப்படும் என்றார்.
