UPDATED : மே 07, 2016 12:00 AM
ADDED : மே 07, 2016 11:18 AM
திருப்பூர்
:
படிப்பில் பின்தங்கிய, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
குறைதீர் கற்பித்தல் பயிற்சி அளிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
முப்பருவ கல்வி முறையில், தொடர் மதிப்பீடு அடிப்படையில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. இதில், நான்கு மாதத்துக்கு ஒருமுறை பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று பருவ தேர்வுகளில் பெறும் மதிப்பெண், பள்ளி சார்ந்த செயல்பாடு, சுற்றுச்சூழல் செயல்பாடு, விளையாட்டு திறன், தனித்திறன் அடிப்படையில், மாணவர்களுக்கு ஏ, பி, சி, டி, மற்றும் இ என, கிரேடு வழங்கப்படுகிறது.
இதில், எட்டாம் வகுப்பு முடிந்து, ஒன்பதாம்
வகுப்பு செல்லும் இ கிரேடு மாணவர்கள், படிப்பில் பின்தங்கியவர்களாக உள்ளதால், அவர்களது பெயர் பட்டிலை இயக்குனரகத்துக்கு, 10க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மூலம், இ கிரேடு மாணவர்களுக்கு, மே மற்றும் ஜூன் மாதங்களில், குறைதீர்
கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில், அனைவரும் தேர்ச்சி முறையில், எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவியர் சிலர், தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களாக உள்ளனர்; இரண்டு ஆண்டுகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய நிலையில், படிப்பில் அவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பது, தேர்ச்சி விகிதத்தை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.
குறைந்தபட்ச
கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக, அம்மாணவர்களுக்கு,
சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. மே மூன்றாவது வாரத்தில்
துவங்கி, ஜூன் வரை, பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
