UPDATED : மே 10, 2016 12:00 AM
ADDED : மே 10, 2016 10:35 AM
பொள்ளாச்சி
: சென்னை ராமலிங்கர் பணி மன்றத்தின் பொன்விழா
கொண்டாட்டம் மற்றும் தொழிலதிபர் மகாலிங்கம் நினைவாக கடந்த 2015ம் ஆண்டு மாநில அளவில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு கலை
இலக்கிய போட்டிகள் நடந்தது.
வளரும் சக்தி வள்ளலார் - காந்தி இலக்கிய பரிசுகள் என்ற தலைப்பில், எட்டு மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பயிலரங்கம் நேற்று துவங்கியது.
ராமலிங்கர் பணி மன்றம் மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். ராமலிங்கர் பணி மன்றத்தின் ஆலோசகர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
பர்வீன் சுல்தானா பேசுகையில், எல்லாம் தெரியும் என்ற மனோபாவம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. தெரியாது என்பதில் இருந்து தொடங்குவதே சிறந்த முதலீடு. உங்களின் ஆற்றலை நம்புங்கள்; நிறைய வாசியுங்கள்; வகுப்பறையை தாண்டி வெளியே கற்றுக்கொள்ளுங்கள், என்றார்.
கவிஞர் சக்திஜோதி, சேதுபதி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்து கலந்துரையாடினர். கட்டுரை, பேச்சு, இசைப்பயிற்சிப்பிரிவுகளில், பல்வேறு முனைவர்களும், கவிஞர்களும் பயிற்சியளித்தனர்.
இப்பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, கல்லுாரி இயக்குனர்(கல்வி) விஜயரங்கன், முதல்வர் ராம கிருஷ்ணன், துணை முதல்வர் ரத்தினவேலு மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
