UPDATED : ஆக 03, 2009 12:00 AM
ADDED : ஆக 03, 2009 12:59 PM
பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதக குறிப்புகள் வழங்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப் பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த ஓராண்டாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வி.ஏ.ஓ.,க்களிடமிருந்து பிறப்பு சான்றிதழ் பெற்று வழங்கினர். இந்நிலையில், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் பதிவாளராக தமிழக ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனர் இளங்கோவன், மாவட்ட பதிவாளர் களாக டி.ஆர்.ஓ.,மற்றும் கூடுதல் பதிவாளர்களாக சுகாதாரத் துறை துணை இயக்குனர்களும் நியமிக்கப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணி புரியும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் சுகாதார ஆய்வாளர்கள் கூடுதலாக பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்தல், சான்றிதழ் வழங்கும் கூடுதல் பணியை மேற்கொள் கின்றனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் பெற முடியும். இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து குழந்தைகள் எங்கு பிறந்தாலும் வி.ஏ.ஓ.,க்களின்றி சுகாதார ஆய்வாளர்களே சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு சான்றிதழ்களுடன் ராசி பலனை குறித்து வைக்கவும், ஜாதக குறிப்பு வழங்கவும் சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
