UPDATED : ஆக 25, 2020 12:00 AM
ADDED : ஆக 25, 2020 01:18 PM
கொரோனா பிரச்னையால், கடந்த மார்ச், 16 முதல், நாடு முழுதும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், நடப்பு, 2020 - 21ம் கல்வியாண்டில், எம்.பி.ஏ., - பி.ஜி.டி.எம்., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் மட்டும், மாணவர்களை, நுழைவு தேர்வின்றி, இளங்கலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், எம்.பி.ஏ., - பி.ஜி.டி.எம்., உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்க, இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
மெரிட்
இக்கழகத்தின் உறுப்பினர் செயலர், ராஜிவ் குமார் கூறியதாவது:
இந்தியாவில், &'கேட், எக்ஸாட், சிமேட், அட்மா, மேட், ஜிமேட்&' போன்ற தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான பொது நுழைவு தேர்வுகள் மூலம், எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.எம்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தாண்டு, கொரோனா அச்சம் காரணமாக, பல மாநிலங்களில், நுழைவு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அவை நடக்குமா அல்லது ரத்தாகுமா எனவும் உறுதியாக தெரியவில்லை.
அதனால், நடப்பு கல்வியாண்டில் மட்டும், இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிப்புகளில் சேர்க்க, சம்பந்தப்பட்ட கல்வி மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு மாணவர், ஏதாவது ஒரு நுழைவு தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்றிருந்தால், அவர் பட்டப் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் அவரை கல்வி மையங்கள் சேர்க்கலாம்.
அதன்படி, காலியிடங்களுக்கு, &'மெரிட்&' அடிப்படையில் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யுமாறு, கல்வி மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
&'கவுன்சிலிங்&'
மாநில அரசுகளும், &'கவுன்சிலிங்&' மூலம் காலியிடங்களை நிரப்பும் போது, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இது, இந்த கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். அடுத்து வரும் கல்வி ஆண்டுகளில், இதை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என, கல்வி மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
