UPDATED : நவ 19, 2020 12:00 AM
ADDED : நவ 19, 2020 02:28 PM
சென்னை:
மருத்துவ கவுன்சிலிங்கில், முறைகேடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு துவங்கும் நாளில், மாணவர் சேர்க்கைக்காக, அ.தி.மு.க., அரசு, &'ரேங்க்&' பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாணவர், எப்படி இரு மாநிலங்களின், ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்; அப்படியென்றால், அந்த மாணவர், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிட சான்றிதழ் பெற்றார்?
தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின், ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள, ரேங்க் பட்டியலிலும் எப்படி இடம் பெற்றனர்? அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்து, கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்த கதையாக மாறி விடக்கூடாது என்பதை, முதல்வர் கருத்தில் வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மாவட்டம் பிரிப்பு!
தி.மு.க.,வில், சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு, மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மாவட்ட பொறுப்பாளராக, சுதர்சனம் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை வடக்கு மாவட்டத்திற்கு, ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் பொறுப்பாளராக, இளைய அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டத்திற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொறுப்பாளராக, சிற்றரசு நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்கு, தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகள் ஒதுக்கப் பட்டு உள்ளன. பொறுப்பாளராக, மயிலை வேலு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
கோரிக்கை பட்டியல்!
சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை , முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி, பேராசிரியை அரங்கமல்லிகா, சங்கர்ராஜ், பரதன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, வரும் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கினர்.
