UPDATED : நவ 11, 2009 12:00 AM
ADDED : நவ 11, 2009 01:57 PM
அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களில் முறைகேடுகள் செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் படத்தையும் சேர்த்து வெளியிடுவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதிப்பெண் சான்றிதழ்களின் பாதுக்காப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் படத்தையும் சேர்த்து வெளியிடுவது என்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தேர்வுகள் இயக்க அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.இ.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த புதிய முறையை இந்தக் கல்வி ஆண்டில் கடைப்பிடித்துப் பார்க்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இந்தக் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. அடுத்த கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தலாம் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளில் மாணவர்களின் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் பெரிதாக சிரமம் எதுவும் இருக்காது என்று அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கருதுகின்றனர்.
