UPDATED : நவ 24, 2009 12:00 AM
ADDED : நவ 24, 2009 12:53 PM
2 ஆண்டுகளாக நடத்தப்படும் எல்.எல்.எம்., படிப்பை ஒரு ஆண்டுப் படிப்பாக மாற்றிட வேண்டிய அவசியம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலும் அம்சத்திலும் இப் படிப்பு மாற்றப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலகெங்கும் சட்டப் பிரிவில் பட்ட மேற்படிப்பு என்பது ஒரு ஆண்டுப் படிப்பாகவே தரப்படுகிறது.
பொதுவாகவே பட்டப்படிப்புகளில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் ஒரு ஆண்டு சட்ட டிப்ளமோ படிப்பும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலமாக துணை சட்டப் படிப்புத்
திறனாளர்களை நாம் உருவாக்க முடியும் என்றும் அதன் மூலமாக அவர்கள் தொடர்பான தேவையை நாம் சந்திக்க முடியும் என்றும் வல்லுனர்கள் இதில் கூறினர். அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் உயர் தரத்திலான சட்ட ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
சட்டத் துறையில் மேம்பட்ட கல்விக்கான தேசிய அளவிலான 4 கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்று தேசிய அறிவு ஆணையம் பரிந்துரைத்ததை நமது தேசிய திட்டக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இவற்றுக்கான தேவையை உணர்ந்து அது போன்ற ஒரு கல்வி நிறுவனத்தையாவது நாம் நிறுவ வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தின் ஆலோசகர் இதில் கருத்துக் கூறினார். சட்டம் என்னும் படிப்பை நமது பொதுவான கல்வி முறையில் ஒன்றிணைக்க வேண்டும் என்றும்
இதில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அது போலவே கட்டுப்பாட்டுச் சட்டம், வணிகச் சட்டம், பன்னாட்டுச் சட்டம், சுற்றுச் சூழல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், பொதுச் சட்டம் மற்றும் சட்டப்பிரிவுக் கல்வி ஆகியவற்றில் சிறப்புப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அதிகமாகவும் தரப்பட வேண்டும் என்றும் இந்த மாநாடு வலியுறுத்தியது.
பள்ளிகளில் சட்டத்தை ஒரு பாடமாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஒரு அறிக்கையை விரைவில் தயாரிக்க வேண்டும் என்று இந்த மாநாடு கூறியது. சட்டப் பிரிவில் பாடத்திட்டத்தை பரிசீலிப்பது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறுகையில் பார் கவுன்சில் இதை ஏற்கனவே பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். மொத்தத்தில் சட்டக் கல்வியில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகத் தேவைப் படுகின்றன என்பதை இந்த மாநாடு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
