UPDATED : டிச 08, 2009 12:00 AM
ADDED : டிச 08, 2009 11:45 AM
கோவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற காலநிலை கணிப்பு குறித்த கருத்தரங்கில், பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது:
சமீப காலமாக விமான விபத்துக்கள் பெருகி வருகின்றன. ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் இது போன்ற ஒரு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. தூரத்தில் இருந்து கணிக்கும் கணிப்புகள் கூட அருகில் நெருங்கியதும் ஆபத்தாக முடிந்து விடுகிறது. நெதர்லாந்து தேசிய வானியல் ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, 13.3 சதவீத மரணத்தை ஏற்படுத்திய விமான விபத்துக்களுக்கும், 43.8 சதவீத சாதாரண விமான விபத்துக்களுக்கும் பருவநிலை முக்கியமாக இருந்துள்ளது.
பெரிய விமானங்களில் 55 சதவீதத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் விமான பயணத்தின்போதும், சிறிய விமானங்களில் 27 சதவீத விபத்துக்கள் தரையிறங்கும் போதும் ஏற்பட்டுள்ளன. 31 சதவீத விபத்துக்கள் ரன்வே வழுக்கலாலும், 23 சதவீதம் மழையாலும், 27 சதவீதம் காற்றாலும் ஏற்பட்டுள்ளன. விமானம் பயணிக்கும் போது பருவநிலை ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டேயிருக்கிறது. காலநிலை ஒரு அறிவியல்; அந்த காலநிலையில் பயணிப்பது ஒரு கலை. காலநிலை மாற்றங்கள், காலநிலை அறிவியல் மற்றும் அதனால் ஏற்படும் இடர்களை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே இந்த கலை கைவரும்.
விமான பயணம் காலநிலை, விமானம், மனித ஆற்றல் ஆகிய மூன்று அம்சங்களை சார்ந்துள்ளது. இதில் விமானம் மற்றும் மனித ஆற்றல் ஆகிய இரண்டு அம்சங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் காலநிலை மாற்றத்தை நம்மால் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
விமான உரிமையாளர்கள் மற்றும் பைலட்டுகள் சங்கம் 1982 முதல் 1993 வரை அளித்த அறிக்கையின்படி, பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட 5,900 விபத்துக்களில் 1,750 பேர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 112 வர்த்தக விமான விபத்துக்கள் மோசமான காலநிலையால் ஏற்பட்டதாக, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகவே விமானத்தை இயக்குவதில் காலநிலை முக்கிய அம்சமாகவே இருந்து வருவதால் இடி, மழை, தூறல் மழை, மின்னல், பனி உறைவு, பனி மூட்டம், தூசு புயல் ஆகிய ஒவ்வொன்றை குறித்தும் துல்லியமான கணிப்புகள் தேவைப்படுகிறது. இப்பிரச்னை பன்முகத் தன்மை கொண்டதால், பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை கணிப்புகள், விபத்துக்களை தவிர்ப்பது, லேசான விளைவுகளை ஏற்படுத்தும் விமானங்களை வடிவமைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி பெற்ற வல்லுனர்கள் தேவை.
இத்தேவையை பூர்த்தி செய்ய, இந்திய விமானப்படை பயிற்சிக் கல்லூரியுடன் இணைந்து பாரதியார் பல்கலையில் வளிமண்டல அறிவியலில் எம்.எஸ்.சி., மற்றும் எம்.டெக்., படிப்புகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.
ஏர் மார்ஷல் ஐயர், ஏர் கமாடோர் சுப்ரமணியன், பாரதியார் பல்கலையில் உள்ள பாதுகாப்பு, ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
