UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 03:52 AM
பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் உட்பட நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப கல்லுாரிகளில் சேர்ந்து பொறியியல் படிப்பு படிக்க, ஜே.இ.இ., மெயின் எனப்படும் முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வு ஜன., மற்றும் ஏப்., ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரு முறை நடக்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் என்ற நுழைவுத் தேர்வை எழுதத் தகுதி பெறுவர்.இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மதிப்பெண் அடிப்படையில் கல்லுாரிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 744 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்தனர். இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 372 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 43 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது ரேங்க் பட்டியலில் ஐ.ஐ.டி., ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் வாவிலாலா சித்விலாஸ் ரெட்டி 360 மதிப்பெண்ணுக்கு 341 பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.ஐ.ஐ.டி., ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்த நயகன்டி நாக பாவ்யா ஸ்ரீ என்ற மாணவி 298 மதிப்பெண் பெற்று பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பொது ரேங்க் பட்டியலில் 56வது இடத்தில் உள்ளார்.
