UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM
ADDED : ஜூன் 24, 2023 09:51 AM
பெரம்பலுார்:
மாவட்ட போலீசார் சார்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம் பெரம்பலுாரில் துவக்கப்பட்டது. பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இத்திட்டத்தை மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளா துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது:
முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர் புதிய திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் போலீசாரின் பணி பொறுப்புகள் காவல் துறை பிரிவுகள் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் ஆயுதப்படை போலீசாரின் பணி பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து வகுப்பு எடுக்கப்படும். சைபர் கிரைம் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்தும் சாலை விதிகளை பின்பற்றுதல் தற்கொலையை தவிர்த்தல் உயிருக்கு அச்சுறுத்தலான காரியங்களை செய்யாமல் தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். காவல்துறை மக்களின் நண்பன் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மட்டுமே காவல் நிலையம் வருவர் என்ற பிம்பத்தை மாற்றி மாணவர்களுக்கும் காவல் துறைக்கும் இந்த திட்டம் நல்லுறவை வளர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.துவக்க விழாவில் பெரம்பலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
