UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 09:54 AM
கம்பம் :
தென் மேற்கு பருவமழை ஏமாற்றி வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து பல்கலை விஞ்ஞானிகளுடன், வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் சாகுபடியாகிறது.கடந்த சில ஆண்டுகளாக பருவமழை உரிய காலத்தில் பெய்ததால் இரண்டு போகமும் பிரச்னையின்றி நடந்தது. ஆனால் இந்தாண்டில் முதல் போக சாகுபடிக்கு அணையில் இருந்து ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம், குச்சனுார், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் உள்ளிட்ட பகுதிகளில் நடவு பணி முடிந்துள்ளது.ஆனால் அணையின் நீர்மட்டம் 115 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 96 கன அடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி எடுக்கப்படுகிறது. இந்நிலையில் மழை இன்று பெய்யும், நாளை பெய்யும் என வானிலை ஆய்வு மையங்கள் கூறி வருகின்றன. ஆனால் இன்னமும் மழை பெய்யவில்லை. மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு விவசாயியும் பல ஆயிரங்களை செலவு செய்துள்ளனர். இந்நிலையில் மழை பெய்யவில்லை என்றால் என்ன செய்வது என்று கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுடன், வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவ மழை ஏமாற்றி வருகிறது. கண்டிப்பாக பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் ஜூலைக்கு பின் என்றால் பலன் இருக்காது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து, வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம், என்றார்.
