UPDATED : ஜூலை 20, 2023 12:00 AM
ADDED : ஜூலை 20, 2023 09:47 AM
கோவை:
கொடிசியா சார்பில், 7வது முறையாக புத்தகத் திருவிழா கொடிசியா வளாகத்தில் வரும் நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.புத்தகத் திருவிழா குறித்து, கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 21ம் தேதி புத்தகத் திருவிழா துவங்கி, 30ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 1 லட்சம் பேர் பார்வையிட்டனர். நடப்பாண்டு 1.5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு 280 ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. இம்முறை 330 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை புத்தக கண்காட்சி பெரும் கவனம் பெற்று வருகிறது. விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது, கோவையைச் சேர்ந்த சுகுமாறனுக்கு வழங்கப்படுகிறது. தவிர, மொழிபெயர்ப்பு, கவிதை, புனைவு இலக்கியங்களில், இளம் படைப்பாளர்களுக்கான விருது வழங்கப்படுகிறது.ஜெயமோகன், நாஞ்சில்நாடன் உள்ளிட்ட ஆளுமைகளின் உரைகள் இடம்பெறுகின்றன. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. மாணவர்களுக்கு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, கண்காட்சி நடைபெறும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கொடிசியா தலைவர் திருஞானம், செயலர் சசிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: கலெக்டர்
கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், புத்தக வாசிப்பு, புதியனவற்றைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. நுாலகத்துறை, பள்ளிக்கல்வித்துறை என பல்வேறு துறைகள் இணைந்து சிறப்பாக பல்வேறு நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளோம்.புத்தக வாசிப்பை ஒரு பொழுதுபோக்காகவும், கல்விக்கான பயன்பாட்டுக்கும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.குழந்தைகளோடு, குடும்பமாக அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். கூடுதல் மக்கள் வரத்தைக் கணக்கிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.
