UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 09:48 AM
சென்னை:
மாற்றுத்திறன் கொண்ட மாணவ - மாணவியர் கல்வி உதவித்தொகை பெற, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வழியே விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு, முதல் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு 1,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டு இத்தொகையை இரு மடங்காக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியர், கல்வி உதவித் தொகை பெற, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வழியே விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்ட பின், கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.இவ்வாறு ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
