UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 09:29 AM
பெங்களூரு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, வீட்டு வாசலுக்கு பள்ளி திட்டத்தை மீண்டும் துவக்க பெங்களூரு மாநகராட்சி ஆலோசிக்கிறது.பள்ளிக்கு வர முடியாத சிறார்களுக்கு, கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2021 ஏப்ரலில் வீட்டு வாசலுக்கு பள்ளி திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது. திட்டத்துக்காக, பி.எம்.டி.சி.,யிடம், 10 பஸ்களை வாங்கி, அவற்றின் வடிவத்தை மாற்றி, குடிசைப்பகுதி, ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி உட்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டன. இதில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று, பஸ்களிலேயே சிறார்களுக்கு கல்வி கற்பித்தனர். கல்வி கற்பிக்க தேவையான கரும்பலகை, பாட புத்தகங்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. வீட்டு வாசலுக்கே வந்து, கல்வி கற்பித்ததால் பலரும் ஆர்வத்துடன் கல்வி கற்றனர். ஆனால் துவங்கிய வேகத்தில் திட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக, பஸ்கள் மண்டல அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வீட்டு வாசலுக்கு பள்ளி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த பெங்களூரு மாநகராட்சி ஆலோசிக்கிறது. ஆண்டு கணக்கில் பஸ்கள், ஒரே இடத்தில் நின்றிருந்ததால், உதிரி பாகங்கள் பழுதடைந்திருக்கலாம். எனவே, பஸ்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். பஸ்களின் ஓட்டுனர்கள், நடமாடும் பள்ளியின் ஆசிரியர்கள் குறித்து, தகவல் சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது.
