UPDATED : ஆக 30, 2023 12:00 AM
ADDED : ஆக 30, 2023 07:14 AM
புதுடில்லி:
சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை பாராட்டி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய, சந்திரயான் - 3 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் கடந்த 23ம் தேதி தரை இறங்கியது. இதிலிருந்து பிரிந்த பிரஜ்ஞான் ரோவர் ஆய்வு செய்து வருகிறது. இந்த சாதனையை பாராட்டி நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பல நுாற்றாண்டுகளாக மனித அறிவின் எல்லைக்கு சவாலாக இருந்த ஓர் விஷயம், இன்று சாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது. இது, இந்தியாவின் முன்னேற்றத்துக்கான அடையாளம். சந்திரயான் - 3 திட்டத்தின் வாயிலாக இளம் இந்தியர்களுக்கு பல வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன. சந்திரயான்- 3 வெற்றி பிரதமர் மோடியின் ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்ற அழைப்புக்கு மாபெரும் சாட்சியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
