UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 10:48 AM
ராஜபாளையம்:
விருதுநகரில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்காக இரண்டாம் இடைப்பருவ தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் கே.வி. எஸ்., பள்ளி வளாகத்தில் நவ.16ல் தொடங்கி நவ.,27 வரை அரசு சார்பில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு, அரசு நிதி உதவிபெறும், மெட்ரிகுலேஷன், பள்ளி கல்லுாரி மாணவர்களை அரங்கத்திற்கு அழைத்து வரும் பணியை கல்வித்துறை செய்கிறது.இரண்டாம் பருவத் தேர்வு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த தமிழ், ஆங்கிலம் இரண்டாம் இடைப்பருவ தேர்வுகளை தவிர பிற தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்ட காட்டாயமாக்கப்படுகிறது.அரையாண்டு தேர்வுகளுக்கு முன் பாடத்திட்டத்தின்படி பாடங்களை முடிக்க ஆசிரியர்கள் முயன்று வரும் நிலையில், கலை திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளால் நாட்கள் தள்ளிப்போனது. இந்நிலையில் வரிசைப்படி பள்ளிகளில் இருந்து மொத்தமாக மாணவர்களை அழைத்து வருவதற்கான நிர்பந்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே பல்வேறு விதமான போட்டிகளை அறிவித்து நடத்தியதில் மாணவர்களுக்கு முழுமையாக பாடங்களை முடித்த பாடில்லை. பொது தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு தேர்வு நெருங்கிய சூழலில் இரண்டாம் இடைப்பருவ தேர்வில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற தேர்வுகள் ஒத்தி வைக்கவும் மொத்தமாக மாணவர்களை அழைத்து வரவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பு பள்ளியில் இருந்தும் 20, 30 மாணவர்கள் அனுப்பி வந்த நிலையில் தற்போது மொத்தமாக மாணவர்களை அழைத்து வர கூறுகின்றனர். மாணவர்களின் பாடத்திட்டம் முழுமை அடையாமல் விடுபடுவதுடன் பெயரளவுக்கு ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
