UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 10:41 AM
திருப்பூர்:
சித்தா மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், திருப்பூரில் நேற்று சித்தா மருத்துவக் கண்காட்சி நடந்தது.முதன்மை சித்தராக போற்றப்படும் அகத்திய மாமுனிவர், மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது பிறந்ததினம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், தேசிய சித்தா மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று, அகத்தியர் பிறந்தநாள். இதைமுன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 7வது சித்தா மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது.கலெக்டர் கிறிஸ்துராஜ், சித்தா மருத்துவ கண்காட்சி அரங்கை திறந்துவைத்து, பார்வையிட்டார். திருப்பூர் மாவட்ட சித்தா மருத்துவ பிரிவு சார்பில், நில வேம்பு குடிநீர், வெற்றிலை தேநீர், செம்பருத்தி தேநீர் வழங்கப்பட்டது. கண்காட்சி அரங்கில், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மூலிகை செடிகள், சித்த மருத்துவ பொடிகள், சூரணம், தைலங்கள் வைக்கப்பட்டிருந்தன.அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சித்தா மருத்துவ அரங்கை பார்வையிட்டனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கை நாடி பார்த்து, நோய் கண்டறியப்பட்டது. நோய் பாதித்தோருக்கு, மக்களைத்தேடி மருத்துவ சித்தா மருந்து பெட்டகம் உட்பட சித்தா மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 100 கையடக்க திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சித்தர்கள் படம் பொறிக்கப்பட்ட காலண்டர் வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், மலை நெல்லி கன்று நடப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தனம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கனகராணி உள்பட சித்தா மருத்துவர்கள் பங்கேற்றனர்.