UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 05:01 PM
கீழடி:
கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் மாதிரியை வடிவமைக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கீழடியில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015ல் வைகை ஆற்றங்கரை நாகரீகத்தை கண்டறியும் பொருட்டு தொடங்கப்பட்ட அகழாய்வில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், விவசாயம், நெசவு தொழில் உள்ளிட்டவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை இதுவரை ஆறு கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது. அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு அதில் 13 ஆயிரத்து 608 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதில் அகழாய்வு தளங்கள், வராஹி உருவம் பதித்த சூதுபவளம்,சுடுமண் பானைகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் அரிவாள், மண்வெட்டி, களைவெட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு அதிகம் உள்ளன.2600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியிலும் ஆயுதங்கள், கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக 5ம் கட்ட அகழாய்வின் போது மணலுாரிலும், கீழடியிலும் உலைகலன் கண்டறியப்பட்டது.அருங்காட்சியகத்தில் உலைகலன் பயன்பாடு குறித்த அனிமேஷன் படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.இதனை கண்ட சுற்றுலா பயணிகள் பண்டைய கால உலைகலனை காண ஆர்வம் காட்டியதை அடுத்து தொல்லியல் துறையினர் உலைகலனை காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கல்மண்டபம் எதிரே மாதிரி உலைகலன் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்கள் காண வசதியாக கண்ணாடி கூண்டும் அமைக்கப்பட உள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் பணிகள் நிறைவடைந்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.