UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:31 AM
பல்லடம்:
பல்லடம் அருகே, காகித விதை பேனா தயாரித்து விற்பனை செய்வதில், மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இன்றைய சூழலில், என்னதான் நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட போதும், அவை புழக்கத்தில் இருந்து கொண்டு தான் உள்ளன. இவற்றால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில், நம்மை அறியாமலேயே, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தான் வருகிறோம்.குறிப்பாக, அன்றாடம் பயன்படுத்தும் பேனாவும் ஒன்று. சமீபகாலமாக, ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும்படியான பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளன. இச்சூழலில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு, காகிதத்தால் உருவாக்கப்பட்ட பேனாவில், விதைகளையும் சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர், மகளிர் சுய உதவி குழுவினர்.பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் - ஐஸ்வர்யா லட்சுமி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சித்ரா கூறியதாவது:
முழுக்க முழுக்க பேப்பரை பயன்படுத்தி இந்த பேனாவை தயாரித்து வருகிறோம். பேனாவின் கீழ் பகுதியில், இதற்காக, ஏற்கனவே தேவையான பயிற்சி பெற்றுள்ளோம். அவரை, பீர்க்கன், பீட்ரூட், வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகள் வைக்கப்பட்டுள்ளன. பேனா விலை 10 ரூபாய். பயன்படுத்திய பின் துாக்கி எறியப்படும் இந்த பேனாவில் உள்ள விதைகள் செடிகளாக முளைக்கும்.தற்போது, திருப்பூரில் கலெக்டர் ஆபீஸ் முன் வைத்து விற்பனை செய்து வருகிறோம். குறைந்த அளவே தயாரித்து உள்ளதால் கடைகளுக்கு இன்னும் சப்ளை செய்யவில்லை.மானியம் கிடைத்ததும் தயாரிப்பை அதிகப்படுத்தி பேனா விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காகித விதை பேனாவுக்கு, மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

