UPDATED : டிச 16, 2024 12:00 AM
ADDED : டிச 16, 2024 04:03 PM
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த இளைஞர் தயாரித்த குறும்படத்திற்கு, ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு பிரிவில் விருது கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 50. இவர், சூர்யநகரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் பிரவீன் குமார், 20, புளூ என்ற குறும்படத்தை இயக்கிஉள்ளார்.
இப்படம் கடந்த 5 முதல் 8ம் தேதி வரை, ரஷ்யாவில் அர்கான்ஜெல்ஸ்க் நகரில் நடந்த, ஆர்க்டிக் ஓபன் என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது. அந்த விழாவில் பலராலும் பாராட்டப்பட்டு, புளூ குறும்படத்திற்கு சிறப்பு பிரிவில் விருது கிடைத்து உள்ளது.
விழாவில் பங்கேற்க ரஷ்யா சென்று திரும்பிய இயக்குனர் பிரவீன்குமார் கூறியதாவது:
சிறுவனின் கனவுகளையும், அவற்றை அடையும் தீர்க்கமான பயணத்தையும் பற்றியே, புளூ படம் பேசுகிறது. குழந்தைகளின் மழலை தன்மையையும், இன்னிசையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்ட படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து, சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்துஉள்ளது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா தலைநகரான பனாஜியில், நவம்பர் 20 முதல் 28 வரை நடந்த மத்திய அரசின் சர்வதேச திரைப்பட விழாவில், நாளைய படைப்பாளிகளை அடையாளம் காணல் என்ற பிரிவில் புளூ குறும்படம் தேர்வாகி உள்ளது.