UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 07:41 PM
மாண்டியா:
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதை கேட்டு இருப்போம். இதற்கு நேர்மாறாக விஜயலட்சுமியின் வெற்றிக்கு பின், அவரது கம்பீர கணவர் உள்ளார்.
மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 52. இவரது கணவர் ரங்கநாத். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி, சமூக சேவை செய்வதையே வாடிக்கையாக வைத்து உள்ளார். கூடுதல் பொறுப்பாக, இல்லத்தை வழி நடத்தும் இல்லத்தரசியாக அவரது வீட்டில் ஆட்சி நடத்தி வருகிறார்.
இவருக்கு பக்க பலமாய், அவரது கணவர் இருந்து வருகிறார். அப்பகுதியில் சிறு சிறு உதவிகளை செய்து வந்து உள்ளார். இருப்பினும், அரசுப்பள்ளியில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு உதவி செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டு வருகிறார்.
இதை செய்வதற்கு சரியான நேரத்திற்காக பல மாதங்களாக காத்திருந்து உள்ளார். இதற்கு ஏற்றாற் போல, தம்மூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் இருந்து உள்ளது. இதை கேள்வி பட்ட விஜயலட்சுமி, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்து உள்ளார். ஆனால், எப்படி உதவுவது என குழப்பத்தில் இருந்து உள்ளார்.
அப்போது, நாமே ஏன் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் வாங்கித்தரக்கூடாது என சிந்தித்து உள்ளார். இது பற்றிய ஆராய்ச்சியை துவங்கினார். இந்த மிஷின் எவ்வளவு, எங்கு கிடைக்கும், எப்படி வாங்குவது என பலரிடமும் விசாரித்து உள்ளார்.
இறுதியில், அவர் மாதம் தோறும், கிரஹலட்சுமி பணத்தின் மூலம் கடந்த 15 மாதங்களாக சேர்த்து வைத்த 30,000 ரூபாய் பணத்தை நன்கொடையாக கொடுக்க முன்வந்து உள்ளார். இருப்பினும், இந்த பணம் சுத்திகரிப்பு மிஷினை வாங்க போதவில்லை. இதனால், மனம் நொந்து உள்ளார்.
அப்போது, மனைவியின் முதுகெலும்பும், சோகத்தை போக்கும் மருந்துமான கணவர் ரங்கநாத் தன்னிடமிருந்த 20,000 ரூபாயை கொடுத்து உள்ளார். இதை பார்த்த விஜயலட்சுமி, ஆனந்தக்கண்ணீருடன் அப்பணத்தை வைத்து நீர் சுத்திகரிப்பு மிஷின் வாங்கி பள்ளியில் பொருத்தினார்.
இப்போது, பள்ளி மாணவர்கள் சுத்தமான குடிநீரை குடித்து மகிழ்கின்றனர். இதனை பார்த்தவர் ஆனந்த பெருக்கில் ஆகாசத்தை அடைந்து உள்ளார்.