UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM
ADDED : ஜூலை 05, 2025 08:47 AM
மடப்புரம்:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை மாயம் தொடர்பாக புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, கல்லுாரிக்கு வரவில்லை என்று, சக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த இவர், திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம்.வி.எம்., அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில், தாவரவியல் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.
அஜித்குமாரின் மரணத்துக்கு பின், பேராசிரியை நிகிதா கல்லுாரிக்கு வரவில்லை என்று, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அவர், பணியில் சேர்ந்ததில் இருந்தே மாணவியர், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறுகின்றனர்.
முன்னாள் மாணவியர் சிலர், அவர் தாவரவியல் துறை துணைத்தலைவராக இருந்த போது, எங்களை மனரீதியாக துன்புறுத்துவார்; வார்த்தைகளால் கஷ்டப்படுத்துவார். பேராசிரியை நிகிதாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என, 2024ல் திண்டுக்கல் கலெக்டரிடம் புகார் அளித்திருந்தோம் என்றனர்.