UPDATED : நவ 17, 2025 07:47 AM
ADDED : நவ 17, 2025 07:48 AM
வால்பாறை:
பள்ளி வகுப்பறையை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 20 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் பள்ளி வளாகத்துக்கு வந்த யானைகள், வகுப்பறை கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தது. வகுப்பறையின் உள்ளே இருந்த இருக்கைகள் மற்றும் மாணவர்களின் நோட்டு, புத்தங்களையும் வெளியே இழுத்து வீசி சேதப்படுத்தியது.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வகுப்பறைகள் சேதமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.

