UPDATED : டிச 01, 2025 07:50 AM
ADDED : டிச 01, 2025 07:51 AM

ஹரியானா:
குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்ஐடியில் பங்கேற்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா பட்டம் வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல, மாணவர்களின் புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கமே என அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், குறைக்கடத்திகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா சாதித்து வருவதை விரிவாக எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் இந்தியாவை தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் உலகளாவிய சக்தியாக மாற்றி வருவதை அவர் குறிப்பிட்டார். புதிய தேசிய கல்விக் கொள்கை இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகளில் வேரூன்றி, பல்துறை கற்றலுக்கான பாதையை திறக்கிறது என்றும் தெரிவித்தார்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் என்ஐடி குருக்ஷேத்ரா மாணவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என துணைத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

