UPDATED : மே 05, 2026 06:43 PM
ADDED : மே 05, 2026 06:45 PM
திருப்பூர்:
மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று நாளில் (மே 8ம் தேதி) வெளியாக உள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வழங்குவது எப்போது என பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவங்கியது. மாநிலம் முழுதும், எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். தேர்வுகள் மார்ச், 26ல் முடிந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 8ல் துவங்கி, 21ம் தேதி நிறைவு பெற்றது. மதிப்பெண் பதிவேற்றும் பணி முழுமையாக முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகிறது.
தேர்வு முடிவு வெளியாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பம் வெளியிடுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், மாணவர் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கமாக, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாளில், அரசு கல்லுாரியில் மாணவர்கள் இணைவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் குறித்த தேதி அடுத்தடுத்த அறிவிப்புகளாக வெளியிடப்படும். ஆனால், தற்போது வரை கல்லுாரி கல்வி இயக்ககம் தரப்பில் எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் தரப்பில் கேட்ட போது, 'வழக்கமாக தேர்வு முடிவுக்கு ஒரு நாள் முன்பாக கல்லுாரி இணையதளத்தில் இளங்கலை விண்ணப்பம் வழங்குவது குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்படும். ஒரிரு நாளில் மாணவ, மாணவியருக்கான அறிவிப்புகளை கல்லுாரி கல்வி இயக்ககம் தெரிவிக்கும்,' என்றனர்.

