UPDATED : ஜூன் 08, 2026 01:18 PM
ADDED : ஜூன் 08, 2026 01:19 PM
கடலுார்:
கடலுார் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் அரசு இசைப்பள்ளி கடந்த, 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்பொழுது பழைய கலெக்டர் அலுவலகத்தில், புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம் அருகில் செயல்பட்டு வருகிறது.
இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என ஏழு கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக (காலை 10:00 முதல் மாலை 4:00 வரை) பயிற்றுவிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர ஆண்டு ஒன்றுக்கு 350 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வயது வரம்பு 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம் ஆகிய கலைகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏனைய நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய துறைகளில் பயிற்சி பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். கடலுார் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை, அரசு விடுதி வசதி, சலுகை கட்டணத்தில் ஆகிய வசதிகள் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாணவர்கள் இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், பகுதி நேரமாக இசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகள் நடத்துவதன் வாயிலாக சுயதொழில் முனைபவர்களாக செயல்பட்டு, பொருளாதார அடிப்படையிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.மேலும், அரசு இசைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு 04142-232021, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
