தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., கற்பிக்கலாம்... நல்லாசிரியர் ஆகுமா?

ஏ.ஐ., கற்பிக்கலாம்... நல்லாசிரியர் ஆகுமா?

ஏ.ஐ., கற்பிக்கலாம்... நல்லாசிரியர் ஆகுமா?


UPDATED : செப் 07, 2026 10:30 PM

ADDED : செப் 07, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:30 PM ADDED : செப் 07, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்களே முதல் பதில். இன்று, ஒரு கேள்வியை மொபைல் போனில் தட்டினால் போதும்; நொடிகளில் பதில் கிடைத்துவிடுகிறது. பாடங்களை விளக்க வீடியோக்கள், சந்தேகங்களைத் தீர்க்க சாட்பாட்கள், விடைகளை எழுத ஏ.ஐ. கருவிகள் என கல்வி உலகம் வேகமாக மாறி வருகிறது.

பாடப்புத்தகத்தை திறப்பதற்கு முன்பே அதன் சாராம்சத்தை செயற்கை நுண்ணறிவு சொல்லிவிடுகிறது. ஆசிரியர் வகுப்பறைக்கு வருவதற்கு முன்பே, மாணவர்களின் கைகளில் பாடத்துக்கான விளக்கங்கள் வந்து சேர்கின்றன.

இந்த மாற்றம் கல்வியை எளிதாக்குகிறதா. அல்லது ஆசிரியரின் இடத்தை மெல்லப் பறிக்கிறதா? செயற்கை நுண்ணறிவு ஆசிரியருக்கு உதவும் கருவியா அல்லது எதிர்காலத்தில் ஆசிரியருக்கே மாற்றாகிவிடுமா என்ற விவாதம் கல்வித் துறையில் தீவிரமடைந்துள்ளது.

சிந்தனைக்கு சவால்

டாக்டர் கோமளலட்சுமி, கவுரவ விரிவுரையாளர், கணினி பயன்பாட்டுத் துறை, பாரதியார் பல்கலை:

ஆசிரியர் பணியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை தவிர்க்க முடியாது. பாடங்களை எளிதாக விளக்கவும், காணொளிகளை உருவாக்கவும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதே நேரம், அனைத்துக்கும் ஏ.ஐ.யை சார்ந்திருக்கும் போக்கு அதிகரித்தால், மாணவர்களின் சுய சிந்தனைத் திறன் பாதிக்கப்படும். சுயமாக சிந்தித்து கற்பிக்கும் மனித ஆசிரியர்களின் பங்களிப்பு குறையக்கூடாது. இல்லாவிட்டால், கல்வியுடன் இணைந்துள்ள மனித உறவுகளும் இயந்திரமயமாகும் அபாயம் உள்ளது.

ஆசிரியருக்கு மாற்றில்லை

சுரேஷ்குமார், மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர்:

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், நல்ல ஆசிரியரின் இடத்தை ஏ.ஐ.யால் மாற்ற முடியாது. தகவல்களை வழங்குவது இயந்திரத்தால் முடியும்; ஆனால், மாணவனின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு, அவனுக்குள் தன்னம்பிக்கையை விதைப்பது ஆசிரியரின் மனிதநேயம்.

ஒவ்வொரு மாணவனின் கற்றல் வேகமும் மனநிலையும் வேறுபடும். அதை உணர்ந்து, சூழலுக்கேற்ப வழிகாட்டும் திறன் மனித ஆசிரியருக்கே உண்டு. தொழில்நுட்பம் அறிவைப் பகிரலாம்; ஆசிரியர் மட்டுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.

மனிதமே முதன்மை

ஜானகி, எழுத்தாளர், படியூர்:

ஏ.ஐ. மனிதனைப் போல செயல்பட முயலலாம்; மனிதனாக மாற முடியாது. ஏற்கனவே உள்ள தரவுகளை வழங்குவது அதன் பணி. ஆனால், சமூகச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் தலைமையை ஆசிரியரால் மட்டுமே உருவாக்க முடியும். அறிவியல் வளர்ச்சியை மறுப்பது நோக்கமல்ல. ஆனால், மனிதனின் சுய சிந்தனையை முடக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தை சார்ந்துவிடக் கூடாது.

தொழில்நுட்பம் வளரலாம்; ஏ.ஐ. இன்னும் பல பணிகளை ஏற்கலாம். ஆனால், ஒரு மாணவனின் திறமையை கண்டுபிடித்து, தோல்வியில் தோள் கொடுத்து, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியரின் இடத்தை இயந்திரங்கள் எளிதில் நிரப்ப முடியாது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us