UPDATED : நவ 11, 2026 03:30 PM
ADDED : நவ 11, 2026 03:33 PM
கோவை:
உணவுக் கழிவுகளை, மறுசுழற்சி செய்து உரம், கால்நடை தீவனம், எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை, தமிழ்நாடு வேளாண் பல்கலை உருவாக்கியுள்ளது.
வேளாண் பல்கலையின் பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் பூச்சியியல் துறை சார்பில், இதற்கான தானியங்கி உணவுக் கழிவு பிராசஸிங் யூனிட், ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, பல்கலை வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிகள் மற்றும் ஆசிரியர்கள் குடியிருப்புகளில் இருந்து தினமும் 300 - 500 கிலோ வரை உணவுக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
செயல்படுவது எப்படி?
உணவுக் கழிவுகள் தானியங்கி எந்திரம் மூலம் கூழாக அரைக்கப்பட்டு, கருப்பு சிப்பாய் ஈ லார்வாக்களுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. புழுக்கள் போன்ற தோற்றமுடைய இந்த லார்வாக்கள் உணவுக் கழிவுகளை உட்கொண்டு அவற்றின் அளவைக் குறைக்கின்றன. 200 கிலோ கழிவுகள் 10 கிலோவாக குறைக்கப்படுகின்றன. இந்த எஞ்சிய பொருட்கள் உரம் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன. லார்வாக்களைச் சேகரித்து உலர்த்தி பவுடராக்கும் போது, சுமார் 45 சதவீதம் புரதச்சத்து கிடைக்கிறது. இதனை கோழி, மீன் போன்ற கால்நடை தீவனங்களில் பயன்படுத்தலாம். லார்வாக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகம் உள்ளது.
இது மருந்து, அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. எண்ணெய் பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் பவுடரை, மீன் தீவனத்தில் சோயாபீனுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். லார்வாக்களின் வெளிப்புற ஓடுகளில் இருந்து கிடைக்கும் கைட்டின், கைட்டோசான் ஆகியவையும் மருத்துவம், தொழில்துறையில் பயன்படுகின்றன.
“தற்போதுள்ள எந்திரம் ஒரு பேட்ச்சுக்கு 200 கிலோ கழிவுகளைக் கையாளும் திறன் கொண்டது. மூன்று ஷிப்டுகளில் இயக்கினால் தினமும் 600 கிலோ வரை கையாள முடியும். இதனை எதிர்காலத்தில் தினமும் ஒரு டன் கழிவு கையாளும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர் நம் நிருபரிடம் பேசிய பேராசிரியர்கள்.
மாநகராட்சி கழிவுக்கு தீர்வு
இந்த தொழில்நுட்பம் பற்றி அறிந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் பிராசஸிங் யூனிட்டை பார்த்தனர். வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளுக்கு இத்தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முடியுமா என ஆலோசித்தனர். முதல்கட்டமாக அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உருவாகும் உணவுக் கழிவுகளை வேளாண் பல்கலையில் வழங்கி பரீட்சித்து பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பார்த்துவிட்டு, மாநகராட்சியின் உணவுக் கழிவுகளைப் படிப்படியாக மறுசுழற்சி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பல்கலை பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, பூச்சியியல் துறைத் தலைவர் டாக்டர் முருகன் ஆகியோர் இத்திட்டத்தைச் செயல்படுத்தி, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியுதவி அளிக்கிறது.
திட்டத்தை விரிவுபடுத்த வேளாண் பல்கலை திட்டம்
வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) ரவீந்திரன் கூறியதாவது:
எங்கள் பல்கலை வளாகத்தில் உருவாகும் உணவுக் கழிவுகளை வெளியே அனுப்பாமல், அவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்றி வருகிறோம். தானியங்கி முறையில் செயல்படுவதால், கழிவுகளைத் தொழிலாளர்கள் கைகளால் கையாள வேண்டிய அவசியமும் இல்லை.
உணவுக் கழிவுகளில் இருந்து ஒருபுறம் உரமும், மறுபுறம் கோழி, மீன் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான புரதச்சத்து நிறைந்த தீவனங்களும் தயாரிக்கப்படுகின்றன. லாரிக் அமிலம் நிறைந்த எண்ணெயும் பிரித்தெடுக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் அழகுசாதனத் துறையில் பயன்படுகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் உள்ள உணவுக் கழிவு பிரச்னைக்கு தீர்வு காண இத்திட்டம் பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
