UPDATED : ஜன 17, 2011 12:00 AM
ADDED : ஜன 17, 2011 04:26 PM
அடுத்த 6 ஆண்டுகளுக்குள் நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் பொருட்டு, 50 சிறப்பு மையங்களை அமைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முயற்சிகளை தொடங்கியுள்ளது. தற்போது நாட்டின் சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே கற்பிக்கப்படும் அறிவியல் தொழில்நுட்ப விஷயங்கள் இந்த மையங்களில் கற்பிக்கப்படும். அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கான உயர்தர மையங்களை நிறுவும் அரசின் முயற்சிகளில் இது முக்கியமானது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மையங்கள் பயோடெக்னாலஜி, நானோமெட்டீரியல்ஸ், மெக்காட்ரானிக்ஸ், பயோஇன்பர்மேடிக்ஸ், நானோடெக்னாலஜி உள்ளிட்ட பல துறைகளைப் பற்றி கற்பிக்கும். இந்த மையங்களை அமைக்கும் பொருட்டு, 30௦ கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 35 செயல்திட்டங்கள், மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தலைமையிலான கமிட்டியினால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 செயல்திட்டங்கள் பின்னர் சேர்க்கப்படும். இந்த உயர்தர அறிவியல் மையங்கள், ஏற்கனவே உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவன வளாகங்களிலேயே செயல்படும். அதேசமயம் சுயாட்சி அதிகாரம் கொண்டதாகவும் இருக்கும்.
இந்த மையங்களின் மூலம், முதுநிலை, பிஎச்.டி. மற்றும் பிஎச்.டி. படிப்பிற்கு பிந்தைய படிப்புகள் நடத்தப்படும். மேலும் கோடை மற்றும் குளிர் காலங்களுக்கான குறுகியகால பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்ட மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் தனிப் பாடங்களை இந்த மையங்கள் வழங்கும்.
இந்த மையங்களை அமைப்பதற்கான செயல்திட்டங்களை அனுப்பியுள்ள கல்வி நிறுவனங்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி திறனை மதிப்பிட, சி.என்.ஆர். ராவ் தலைமையிலான கமிட்டியானது, பல சர்வதேச அளவிலான மதிப்பீடுகளையும், கடினமான அளவீடுகளையும் நிர்ணயித்துள்ளது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயல்திட்டங்கள் &'ஏ+&' மற்றும் &'ஏ&' என்ற இரு நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் செயல்திட்டங்களை அனுப்பியுள்ள கல்வி நிறுவனங்களில், ஒரு கல்வி நிறுவனம் கடந்த 5 வருடங்களில் எத்தனை பிஎச்.டி. மற்றும் முதுநிலை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என்ற கணக்கின் அடிப்படையிலும், ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்திட்டங்களை தயாரிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவினுடைய தலைவரின் தகுதிகளை கருத்தில்கொண்டும் அனுப்பப்பட்ட செயல்திட்டங்களில் பொருத்தமானவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த 2012, மார்ச் 31 ம் தேதி முடிவடைய உள்ள 11 வது ஐந்தாண்டு திட்டத்தில், அந்த உயர்தர மையங்களை அமைக்க ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கான ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும் ஒப்பந்த அடிப்படையில், அதிக சம்பளத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
