UPDATED : ஜன 18, 2011 12:00 AM
ADDED : ஜன 18, 2011 04:09 PM
டெல்லியில் நடைபெறும் மாதிரி(வெர்ச்சுவல்) கல்வி கண்காட்சியில், ஆஸ்திரேலியாவின் 18 பிரதான பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகின் 100 சிறந்த பல்கலை பட்டியலில் இடம்பெற்ற 5 பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு உதவும் ஐ.டி.பி. கல்வி அமைப்பால் நடத்தப்படும் இந்த கண்காட்சி, ஜனவரி 17 முதல் 28 வரை நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில், வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலை பிரதிநிதிகளுடன் லைவ் சாட்டிங் செய்ய முடியும்.
பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், தங்களின் கட்டண குறைப்பு மற்றும் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்க இந்த கண்காட்சி உதவி செய்கிறது. இந்த கண்காட்சி குறித்து ஐ.டி.பி. -இன் தெற்காசிய பிராந்திய இயக்குனர் ஹர்மீத் பென்டல் கூறியதாவது, "மாணவர்கள் தங்களின் வெளிநாட்டு கல்வி பற்றி ஒரு சரியான முடிவெடுக்க உதவுவதே இந்த கண்காட்சியின் நோக்கம். ஐ.டி.பி. ஆப்லைன் உதவியானது, கல்வியின் சில சம்பிரதாய பணிகளான விண்ணப்ப சமர்ப்பிப்பு, ஆபர்களை ஏற்றுக்கொள்ளுதல், விசா ஆலோசனை மற்றும் டியூஷன் கட்டணம் போன்றவைகளில் உதவுகிறது.
ஐ.டி.பி. கல்வி அமைப்பானது, 24 நாடுகளில் 70 க்கும் மேற்பட்ட ஆலோசனை மையங்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் 13 நகரங்களில் 15 ஆலோசனை மையங்கள் செயல்பட்டு, மாணவர்கள் சிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்க உதவுகின்றன.
